விஜயகாந்த் மறைவு.. தீவுத்திடலில் அஞ்சலி செலுத்த வரும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
- தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது.
- மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 28) காலை சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். இவரது மறைவை அறிந்து பலர் சமூக வலைதளங்களிலும், நேரிலும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தே.மு.தி.க. அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் நள்ளிரவிலும் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இன்று அதிகாலை தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படும் விஜயகாந்த் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், இன்று மதியம் 12.30 மணி அளவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விஜயகாந்த்-க்கு நேரில் அஞ்சலி செலுத்த வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் பொது மக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட இருக்கிறது. பிறகு, அங்கிருந்து மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகம் கொண்டுவரப்படுகிறது. இன்று மாலை 4.45 மணிக்கு இறுதி சடங்கு தொடங்க இருக்கிறது.