ராஜபாளையம் அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
- எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
- ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் இணைப்பு சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ளது முதுகுடி இங்கு சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்து தரப்படவில்லை கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் முதுகுடியில் இருந்து எஸ்.ராமலிங்காபுரம் செல்லும் சாலையில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.இந்த சாலை ராஜபாளையம்-சங்கரன்கோவில் பிரதான சாலையில் இணைப்பு சாலையாக இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த கீழராஜகுலராமன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம மக்கள் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதராமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். அவர்களது கோரிக்கைகளை கேட்ட போலீசார், அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து 9 மணி அளவில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.