தமிழ்நாடு

வைகை அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

Published On 2024-09-15 06:03 GMT   |   Update On 2024-09-15 06:03 GMT
  • வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது.
  • பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்துக்காக கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

தற்போது அணையில் 62 அடிக்கு தண்ணீர் இருப்பதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டத்தில் ஒரு போக பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகாவில் 1797 ஏக்கர், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் 16452 ஏக்கர், மதுரை வடக்கு தாலுகாவில் 26792 ஏக்கர் என மொத்தம் 4541 ஏக்கர் நிலங்கள் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியின் கீழ் இரு போக பாசன நிலங்களாக உள்ளன.

இந்த நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக திறக்கப்பட்ட 900 கன அடி நீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் 120 நாட்கள் திறக்கப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து இன்று காலை முதல் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 1130 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டி, மேலூர், மதுரை வடக்கு, திருமங்கலம், சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இந்த தண்ணீர் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் என 120 நாட்களுக்கு 8461 மில்லியன் கன அடி நீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் நீர்மட்டம் குறைவதை ஈடுசெய்யும் வகையில் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வைகை அணைக்கு திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 61.48 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 561 கன அடி வருகிறது. பாசனத்துக்கு 1130 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 என மொத்தம் 1199 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 3892 மி.கன அடியாக உள்ளது.

பெரியாறு அணையின் நீர்மட்டம் 131.95 அடியாக உள்ளது. வரத்து 767 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 5153 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.18 அடியாகவும் உள்ளது.

Tags:    

Similar News