பூண்டி ஏரி பகுதியில் சிதிலமடைந்து காணப்படும் சிறுவர் பூங்கா சீரமைக்கப்படுமா?
- பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
- வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் அடுத்த பூண்டியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை அகற்றி 1944ல் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கட்டி திறக்கப்பட்டது.
இந்த நீர்த்தேக்க பகுதியில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆதிமனிதர்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள் கொண்ட அருங்காட்சியகம், பல்வேறு அணைக்கட்டு மாதிரிகள் இடம் பெற்ற நீரியல் மற்றும் நீர் நிலையியல் ஆய்வு மையம் ஆகியவையும் இங்குள்ளன.
மேலும் நீர்த்தேக்கத்துக்கு நடுவில் இருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊன்றீஸ்வரர் கோவிலும் அகற்றப்பட்டு பூண்டி பஸ் நிலையம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த அணையில் நீர்வற்றும்போது பழமையான ஊன்றீஸ்வரர் கோவிலைக் காணலாம்.
இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்குவதால், நாள்தோறும் பல்வேறு பகுதியில் இருந்து குழந்தைகள், முதியவர்கள், மாணவ-மாணவிகள் என சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் உள்ளது.
பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்தக் கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. பரப்பளவு 121 சதுர கி.மீ ஆகும்.
பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றுவதற்காக 16 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கொசஸ்தலை ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது.
மேலும் கனமழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால் அணை நிரம்பினால் பேபி கால்வாய் மற்றும் பிரதான இணைப்பு கால்வாய் மூலம் சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும்.
வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பூண்டி நீர்த்தேக்கம் மக்களின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது.
இங்குள்ள பூங்காவில் பெரியோர்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் விளையாட்டு ஊஞ்சல்கள், அமரும் இருக்கைகள் போன்றவை இருந்தன. எனினும் இப்பூங்கா தற்போது போதிய பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.
அதனால் இனி வருங்காலத்தில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அடிப்படை வசதிகள் மற்றும் சேதமடைந்த பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.
இதுபோன்று செய்வதன் மூலம் வருங்காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
பூண்டியில் நீர்த்தேக்கம் அமைப்பதற்காக இப்பகுதியைத் தோண்டியபோது கிடைத்த பழங்காலப் பொருள்களைக் கொண்டு ஓர் அருங்காட்சியகம். இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி மாணவ, மாணவிகள் ஆராய்ச்சிக்காக இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த அருங்காட்சியகத்தில் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்களால் ஆன ஆயுதங்கள் மற்றும் முதுமக்கள் தாழி போன்றவையும் இடம் பெற்றுள்ளன.
மேலும் பூண்டிக்கு அருகிலுள்ள கொசஸ்தலை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதியிலும் அதையடுத்துள்ள அல்லிக்குழி மலைத்தொடரின் சமவெளிப் பகுதிகளிலும் சுமார் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதற்கான தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன.
இதைக் கருத்தில்கொண்டு பூண்டி நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை சார்பில் தமிழகத்தின் தொன்மையை விளக்கும் வகையில் தொல் பழங்கால அகழ்வைப்பகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அகழ்வைப்பகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக பழைய கற்காலக் கருவிகள் நுண்கற்காலக் கருவிகள், புதிய கற்காலக் கருவிகள், பெருங்கற்காலத்தைச் சார்ந்த பெரிய ஈமப்பேழை கல்மரம், நிலவியல் படிமங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரிக்கரை மீது சேதமடைந்த பூங்காவை தரம் உயர்த்தும் வகையிலும், சிறுவர்களை ஈர்க்கும் வகையிலும் நவீன அறிவியல் தொழில்நுட்ப உபகரணங்கள், டைனோசர், செல்பி பாயிண்ட், விளையாட்டு உபகரணங்கள் அமைக்கவும் ரூ.80 லட்சம் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் நீர்த்தேக்க வளாகத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் சத்தியமூர்த்தி திருவுருவச்சிலையுடன் அறிவியல் பூங்கா சிறுவர்களை ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வந்தது.
இங்கு சிறுவர்கள் பொழுது போக்கும் வகையில் அறிவியல் உபகரணங்கள், குடை ராட்டினம், ஏற்ற இறக்கம் மற்றும் சம விளையாட்டு, குதிரை சவாரி ராட்டினம், ஊஞ்சல் விளையாட்டு, பூங்கா நீருற்று, இருக்கைகள் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்தது.
அதனால் அதிகம் பேர் வந்து செல்லும் இடமாகவும் இருந்தது. ஆனால், திறந்த வெளியில் இருந்ததால், போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் புகலிடமாகவே மாறியது. அதோடு, கால்நடைகளும் புகுந்து விடுவதால் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் ஆகியவைகள் சேதமடைந்தது.
இந்த நிலையில் பூங்காவை சீரமைத்து குழந்தைகளின் பயன்பாட்டிற்கு அறிவியல் பூங்காவை நவீன முறையில் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.80 லட்சமும் ஒதுக்கீடு செய்து பணிகள் மேற் கொண்டனர். ஆனால் இதுவரை அறிவியல் பூங்கா பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை.
தற்போது இந்த அறிவியல் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சேதமடைந்த நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் சீரமைக்கப்படும். அதேபோல், நவீன முறையில் குழந்தைகள் அறிவுபூர்வமாக கற்றதை நேரடியாக செயல் விளக்கம் மூலம் பெறும் நியூட்டன் இயக்க விதி போன்ற பல்வேறு அறிவியல் உபகரணங்கள் நிறுவப்பட உள்ளது. மேலும் டைனோசர், பூங்காவிற்கு வந்து செல்வோர் நினைவாக சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில் செல்பி பாயின்ட் ஆகியவை அமைக்கப்பட உள்ளது.
மேலும் பூண்டி நீர்த் தேக்கத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் தேவையான பணிகளை மேம்படுத்தினால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.