தமிழ்நாடு

ஒரு வாலிபரால் ஏமாற்றம்... மற்றொரு வாலிபரால் உயிர் பிழைத்த இளம்பெண்

Published On 2024-01-13 10:02 GMT   |   Update On 2024-01-13 14:40 GMT
  • சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
  • மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரியில் மேட்ரிமோனி மூலம் திருமணம் செய்துகொள்வதாக கூறி திருமண நிச்சயதார்த்தம் செய்த பிறகு ஏமாற்றுவதாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணகிரி - பெங்களூரு பழைய சாலையில் பைனான்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் குணசேகரன் (வயது 30). இவர் திருமணத்திற்காக பெண் தேடி வந்த நிலையில் மேட்ரிமோனி மூலமாக கூடுவாஞ்சேரியை சேர்ந்த 26 வயதான இளம்பெண்ணை பார்த்து பேசி பழகி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குணசேகரன் மற்றும் இளம்பெண் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். இதையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று உள்ளது.

இந்நிலையில், கிருஷ்ணகிரி- பெங்களூரு பழைய சாலையில் குணசேகரன் நடத்திவரும் அலுவலகத்தின் முதல் தளத்தின் பாதுகாப்பு சுவர் மீது அமர்ந்து இளம்பெண் தற்கொலை செய்துகொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்துகொள்வதாக நிச்சயதார்த்தம் செய்துவிட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாகவும், பலமுறை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் மறுப்பு தெரிவிக்கிறார். என்னிடம் பேசுவதில்லை, என்னுடைய செல்போன் எண்ணை எடுக்கவில்லை. அதனால் குணசேகரன் இங்கு வரவேண்டும். இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேன் என இளம்பெண் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக நீடித்த சம்பவத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இளம்பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக தெரிவித்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் இருந்த சுகுமார் என்ற வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இளம்பெண்ணை பின்புறமாக பிடித்து இழுத்து அமர வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து மயக்கமடைந்த நிலையில் இருந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Full View

Tags:    

Similar News