தமிழ்நாடு

காவல்துறையின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழக வெற்றிக் கழகம்

Published On 2024-09-06 11:31 GMT   |   Update On 2024-09-06 11:32 GMT
  • விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.
  • விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

சென்னை:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கி தமிழ்நாட்டு அரசியலில் புதிய புயலாக வந்துள்ளார்.

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்யின் குறிக்கோளாக உள்ளது.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை நடிகர் விஜய் அறிமுகம் செய்தார். அதோடு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தமிழகம் முழுவதும் பூத் வாரியாக விரைவுப்படுத்த அறிவுறுத்தி உள்ளார். ஒரு கோடி முதல் 1.50 கோடி உறுப்பினர்களை முதல் கட்டமாக சேர்க்க அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இதன் காரணமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை எந்த கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் கட்சியின் தொடக்கத்தை எழுச்சி ஏற்படுத்தும் வகையில் பிரமாண்டமான முதல் அரசியல் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சென்னை உள்பட பல இடங்களில் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர். திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்த நிலையில் அங்கு அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 23-ந்தேதி முதல் மாநாட்டை நடத்த விஜய் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள். மாநாடு நடத்துவதற்கு சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 'சாலை' என்ற இடத்தில் 85 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டுக்காக பிரமாண்ட மேடை, உணவுக்கூடம், ஆம்புலன்ஸ் வசதி, கழிப்பிடம், குடிநீர் வசதிகள், 40 ஏக்கரில் ஒரு வாகன நிறுத்தமும் 27 ஏக்கரில் இன்னொரு வாகன நிறுத்தமும் என 2 வாகன நிறுத்தம் உள்பட பல்வேறு பாதுகாப்பு வசதிகளுடன் மாநாட்டுக்காக ஏற்பாடுகள் செய்யப்பட இருக்கிறது.

மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வசதி கேட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 28-ந்தேதி தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்தார்.

இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீசார் கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்துக்கு 21 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

போலீஸ் அதிகாரிகளின் கடிதம் விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மூலமாக புஸ்சி ஆனந்திடம் வழங்கப்பட்டது. மாநாட்டு பந்தலின் நீளம், அகலம், பங்கேற்போரின் எண்ணிக்கை, மேடையில் அமர்பவர்கள் யார் யார்? முக்கிய பிரமுகர்கள் வரும் நேரம், வழி, அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு செய்யப்பட்ட வசதிகள் என்னென்ன? எந்தெந்த பகுதியில் வாகன பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

எத்தனை வாகனங்கள் நிறுத்தலாம்? குடிநீர் வசதி, உணவுக்கூடம், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி, அவசர ஆம்புலன்ஸ் வசதிகள், நிலத்தின் உரிமையாளரிடம் பெறப்பட்ட அனுமதி கடித விபரம், மாநாட்டு இருக்கைகள் வசதி என்பது உள்பட 21 கேள்விகளை போலீசார் கேட்டு இருந்தனர்.

இந்த 21 கேள்விகளுக்கும் 5 நாட்களுக்குள் நடிகர் விஜய் கட்சி தரப்பில் பதில் தர வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருந்தனர்.

போலீசாரின் 21 கேள்விகள் குறித்து நடிகர் விஜய் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். விக்கிரவாண்டி அருகே மாநாடு நடத்துவதில் ஏதேனும் சட்ட சிக்கல் உள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசாரின் 21 கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பான போலீசாரின் 21 கேள்விகளுக்கு பதில் அளித்து விளக்க கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த கடிதத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இட வசதி பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மாநாடு நடக்கும் இடத்தில் மேடை அரங்கு எத்தனை சதுர அடி நீளம் அகலத்தில் அமைகிறது என்ற விவரம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. மேடை அமைக்கப்படும் பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வந்து செல்லும் வசதிகள் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தமிழ்நாடு முழுவதும் இருந்து வரும் தொண்டர்களுக்கு எந்தெந்த இடங்களில் எப்படி உணவு வழங்கப்படும் என்பதும் கூறப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தொகுதி தொண்டர்கள் வரும் வாகனங்கள் நெரிசல் இல்லாமல் நிறுத்துவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் உள்ள ஏற்பாடுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.

மாநாட்டுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1 லட்சம் பேர் வருவார்கள் என்று விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபோன்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்ட 21 கேள்விகளுக்கும் விஜய் விளக்கமான பதில்களை அளித்துள்ளார்.

இந்த பதில்கள் அடங்கிய கடிதத்துடன் இன்று (வெள்ளிக்கிழமை) கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் சென்னையில் இருந்து விழுப்புரம் புறப்பட்டு சென்றார். இன்று மாலை அவர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து 21 விளக்கங்கள் அடங்கிய பதில் கடிதத்தை கொடுத்தார்.

விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை பெற்றுக்கொண்ட போலீசார் ஆவன செய்வதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் விக்கிரவாண்டி அருகே மாநாடு நடக்கும் இடத்துக்கு மீண்டும் சென்று ஆய்வு செய்வார்கள் என்று தெரிகிறது.

அதன் பிறகு முறைப்படி விஜய் மாநாட்டுக்கு அனுமதி வழங்கி அதிகாரப்பூர்வ கடிதம் போலீஸ் தரப்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மாநாட்டுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக விஜய் கட்சி நிர்வாகிகள் ஆர்வமுடனும், உற்சாகத்துட னும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Tags:    

Similar News