தீ விபத்தில் பலரை காப்பாற்றி விட்டு உயிரை விட்ட ஆசிரியை
- 2-வது மாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் பிழைத்தனர்.
- புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியை பரிமளா சவுந்தரி மட்டும் அதிக புகையால் மூச்சுவிட முடியாமல் மயங்கினார்.
மதுரை பெண்கள் விடுதியின் முதல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் இன்று அதிகாலை வெடித்துச்சிதறி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அளவுக்கு அதிகமான கரும்பு புகை வெளியேறியதால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது முதல் மாடியில் இருந்து இரண்டாவது மாடிக்கும் புகை பரவுவதை தடுக்க அங்கிருந்தவர்கள் கதவை பூட்டினர்.
2-வது மாடியில் தங்கியிருந்தவர்கள் கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்று உயிர் பிழைத்தனர். இதற்கிடையே விபத்து ஏற்பட்ட பகுதியில் தங்கியிருந்த ஆசிரியை பரிமளா சவுந்தரி சுதாரித்துக்கொண்டு அந்த அறையில் தூக்கத்தில் இருந்தவர்களை எழுப்பி அங்கிருந்து கீழே செல்லுமாறு அப்புறப்படுத்தினார்.
உடனடியாக அவர்களும் புகை மண்டலத்துக்கு நடுவில், செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் தப்பினார்கள். ஆனால் புகையில் சிக்கிக்கொண்ட ஆசிரியை பரிமளா சவுந்தரி மட்டும் அதிக புகையால் மூச்சுவிட முடியாமல் மயங்கினார்.
ஒருசில விநாடிகளில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல்தான் மற்றொரு பேராசிரியையான சோழவந்தான் பகுதியை சேர்ந்த சரண்யாவும் உயிரை விட்டார். தன்னலம் கருதாமல் கடைசி நேரத்திலும் மற்றவர்களை காப்பாற்றிவிட்டு உயிரை விட்ட ஆசிரியை பரிமளா சவுந்தரியின் செயலை எண்ணி சக பெண்கள் கண்ணீர் விட்டனர்.