இந்தியா

மீட்பு பணிக்காக 20 மணி நேரத்தில் ராணுவத்தினர் அமைத்த தற்காலிக பெய்லி பாலம்

Published On 2024-08-02 02:16 GMT   |   Update On 2024-08-02 02:28 GMT
  • பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.
  • இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது.

வயநாட்டில் சூரல்மலை, முண்டகை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், கொட்டும் மழைக்கு மத்தியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி ஆற்றை கடந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

சூழல்மலை-முண்டகை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், பொக்லைன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் ஆற்றை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்பு பணியை துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக, டெல்லி, பெங்களூருவில் இருந்து ராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர்.

பெய்லி பாலத்திற்கு தேவையான உபகரணங்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனங்கள் மூலம் சூரல்மலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவு, பகலாக மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.

ராணுவத்தின் முயற்சிக்கு பலன் கிடைத்தது. நேற்று மாலை 5.50 மணிக்கு தற்காலிக பெய்லி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து பெய்லி பாலத்தில் முதல் வாகனமாக ராணுவ மேஜர் ஜெனரல் மேத்யூஸ் தனது வாகனத்தில் சென்றார். தொடர்ந்து ராணுவ வாகனம், பொக்லைன் எந்திரங்கள் பாலத்தில் சென்றன.

20 மணி நேரத்திற்குள் தற்காலிக பாலத்தை ராணுவத்தினர் வெற்றிகரமாக அமைத்து உள்ளனர். இதன் நீளம் 190 அடியாகும். இந்த பாலம் 24 டன் வரை எடையை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் சூரல்மலை-முண்டகை இடையே மீட்பு பணிக்காக வாகனங்கள் சென்று வருகின்றன.

Tags:    

Similar News