பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விடாமல் சாதித்து காட்டியவர் மு.க.ஸ்டாலின்- திருமாவளவன்
- முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
- கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
எனவே 40 தொகுதிகளிலும் வெற்றியளித்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வரலாற்று வெற்றி தேடி தந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா தி.மு.க. சார்பில் இன்று மாலை 4 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் தொடங்கியது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., பங்கேற்றுள்ளனர்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இவ்விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பாஜகவை தமிழகத்தில் கால்பதிக்க விமாமல் சாதித்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் போன்ற தலைமை அரசியலில் அபூர்வம், அற்புதம்.
கேரளாவில் ஒரு நடிகரை வைத்து, ஒரு இடத்தை பாஜக கைப்பற்றியுள்ளது. ஆனால், எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் பாஜகவால் தமிழகத்தில் வேரூன்ற முடியாது.
ஆந்திராவில், சந்திரபாபு நாயுடு, பவன் கல்யானை வளைத்துப்போட்டு சில இடங்களில் பாஜக வென்றுள்ளது.
இந்திய கூட்டணி தலைவர்களே, முதல்வர் ஸ்டாலினை வியந்து பார்க்கிறேன்றனர். சோனியா உள்ளிட்ட தலைவர்கள் இணைந்து முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலினின் அணுகுமுறை, உக்திகளே வெற்றிக்கு காரணம்.
2019க்கு முன் காவிரியை வைத்து முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய கூட்டணி இன்றும் தொடர்கிறது.
மழைக்கால தவளை போல் ஒருவர் தாமரை மலரும் மலரும் என்று கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டணி கட்சிகளுக்காக திமுக வென்ற தொகுதிகளை விட்டுக் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு அவர் கூறினார்.