தமிழ்நாடு (Tamil Nadu)

முடங்கி நிற்கும் திருமழிசை துணை நகர திட்டம்: குளறுபடியால் 16 ஏக்கராக சுருங்கியது

Published On 2023-11-03 09:09 GMT   |   Update On 2023-11-03 09:38 GMT
  • திருமழிசையில் 311 ஏக்கரில் ரூ.2160 கோடி மதிப்பில் துணைநகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அரசு அறிவித்தது.
  • கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

திருவள்ளூர்:

சென்னை நகருக்கு இணையாக தற்போது புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. நகரத்தில் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலானோார் இப்போது புறநகர் பகுதிகளில் குடியேற தொடங்கிவிட்டனர்.

இதனால் சென்னையை சுற்றி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில் மக்கள்தொகை எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப அப்பகுதிகளில் போக்குவரத்து, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இதில் சென்னை புறநகர் பகுதியான திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட இடங்களில் புதிதாக குடியேறும் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய துணை நகரங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சி.எம்.டி.ஏ. பரிந்துரைத்தது.

அதன்படி திருமழிசையில் 311 ஏக்கரில் ரூ.2160 கோடி மதிப்பில் துணைநகரம் அமைக்கப்படும் என்று கடந்த 2011-ம் ஆண்டு அரசு அறிவித்தது. இதற்காக திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கம், செம்பரம்பாக்கம், வெள்ளவேடு பர்வதராஜபுரம், நரசிங்க புரம் கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

கிராம மக்களின் எதிர்ப்பு மற்றும் வழக்குகள் காரணமாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே துணை நகர திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடங்களில் தற்போது ஒரு சாலை அமைக்கும் பணி மட்டுமே இதுவரை நடந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சாலையை ஒட்டி இருந்த 24 ஏக்கர் நிலம் குத்தம்பாக்கம் பஸ் நிலைய பணிக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மீதி உள்ள நிலத்தில் துணை நகரம் அமைப்பதற்கு வீட்டு வசதி வாரியம் திட்டமிட்டது. இதற்காக ரூ.1280 கோடி மதிப்பில் புதிய வரைவு திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டமும் இப்போது செயல்படுத்த முடியாத நிலையில் முடங்கி கிடப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு 311 ஏக்கரில் அறிவிக்கப்பட்ட திருமழிசை துணை நகர திட்டம் பல்வேறு குளறுபடிகள் காரணமாக 16.92 ஏக்கரில் மட்டுமே செயல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 2011-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திருமழிசை துணைநகர திட்டம் செயல்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி 16.92 ஏக்கரில் மட்டுமே இதனை செயல்படுத்த முடியும். இங்குள்ள விவசாய நிலங்களை வகைப்பாடு மாற்றம் செய்யக்கோரி சி.எம்.டி.ஏ.வுக்கு விண்ணப்பித்து இருக்கிறோம். வாரிய நிதியில் மனை திட்டம் மட்டுமே இங்கு செயல்படுத்த முடியும் என்றார்.

Tags:    

Similar News