திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1.15 லட்சம் திருடிய 2 பெண்கள் கைது
- முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
- போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.