திருப்பரங்குன்றம் கோவில் பகுதியில் ட்ரோன் பறக்கவிட்ட 3 பேர் கைது
- முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோவில்.
- திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, ‘ட்ரோன்’ கேமரா பறக்க விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
திருப்பரங்குன்றம்:
முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடு என்ற சிறப்பு பெற்றது திருப்பரங்குன்றம் முருகன் கோவில். இதனால் இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
குடைவரை கோவில் என்பதால் இக்கோவிலின் பெரும் பகுதி தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் கோவிலின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் நேற்று மாலை சிலர் 'ட்ரோன்' கேமரா பறக்க விடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 'ட்ரோன்' கேமரா பறக்க விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் எந்தவித அனுமதியும் பெறாமல் 'ட்ரோன்' கேமராவை பறக்க விட்டது தெரிய வந்தது.
இதையடுத்து 'ட்ரோன்' கேமராவை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து புகைப்பட கலைஞர்களான மதுரை அனுப்பானடியை சேர்ந்த சுரேஷ்குமார், பிரசாந்த் பழங்காநத்தத்தை சேர்ந்த நரேந்திரகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.