குண்டாஸ் பாயும்போது காலை உடைத்துக் கொண்டவர் செல்வப்பெருந்தகை - அண்ணாமலை
- செல்வப்பெருந்தகை 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பாஜகவில் ரவுடிகள் சேருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் மீண்டும் அவர் இன்று செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
செல்வப்பெருந்தகை 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பா.ஜ.க.-வில் ரவுடிகள் சேருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதனால் அவரது பின்னணி பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1885-ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.
செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.
இன்று பசுத்தோல் போர்த்திய புலியாகதான் காந்தி வழியில் வந்தவன், நான் நல்லவன் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அவர் மீதான எல்லா வழக்குகளையும் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அவர் மீது குண்டர் சட்டம் போட்டது ஜெயலலிதா தான். ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் மத்திய அரசுதான் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
செல்வப்பெருந்தகை மீது சி.பி.ஐ. வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. என்னை ரவுடி என்று கூறி விட்டார். நான் கோர்ட்டுக்கு போகப் போகிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
லண்டனில் நீங்கள் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தையெல்லாம் நான் கொண்டு வருகிறேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராகவே உள்ளேன். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தின் அரசியல் திருந்தும் என்றால் என்னை அர்ப்பணிப்பதற்கு தயாராகவே உள்ளேன்.
ரிசர்வ் வங்கியில் கடை நிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன உள்ளது? ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றிப் பேசினார்கள்? என்பது பற்றியெல்லாம் பேசுவோம்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.