தமிழ்நாடு

கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்- கமல்ஹாசன்

Published On 2024-06-20 09:13 GMT   |   Update On 2024-06-20 09:13 GMT
  • உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  • போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை விடுவிப்பதற்கு மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கள்ளச்சாராயம் குடித்ததில் பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடையை விழைகிறேன்.

தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இனியொரு முறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளைத் தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும்.

போதைக்கு எதிரானப் போரில் நாம் ஒவ்வொருவருமே ஈடுபட வேண்டிய தருணம் இது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News