டி.வி. தலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த 1½ வயது குழந்தை உடல் உறுப்புகள் தானம்
- இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
- 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னையில் 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை மூளைச்சாவு அடைந்தது. அந்த குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் வழங்க ஆலோசனை வழங்கப்பட்டது. கூலித் தொழிலாளர்களான அந்த குழந்தையின் பெற்றோரும் அதற்கு உடன்பட்டனர்.
இதையடுத்து உடல் உறுப்புகளை ஆபரேசன் செய்து அகற்றுவது தொடர்பாகவும், தானம் தேவைப்படுபவர்கள் பற்றிய பட்டியலும் தயாரிக்கப் பட்டது.
மிகவும் சிறிய வயது குழந்தையின் உறுப்புகள் என்பதால் பொருத்தும் தகுதி உடையவர்கள் கிடைப்பதற்கு சில மணி நேரங்கள் ஆனது.
இரு கிட்னியும் செயலற்ற 19 வயது நோயாளிக்கு சிறுநீரகங்கள் பொருத்தப்பட்டது. கல்லீரல் 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அந்த 1½ வயது குழந்தை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.