போதை மாத்திரை விற்ற மருந்து கடை ஊழியர் உள்பட 2 பேர் கைது
- கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
- சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
கோவை:
கோவை ரத்தினபுரி பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் ரத்தினபுரி சம்பத் வீதியில் உள்ள மயானம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு 6 பேர் கும்பலாக நின்றிருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அருகே சென்றனர். போலீசார் வருவதை பார்த்ததும் வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
போலீசார் விடாமல் அவர்களை துரத்தி சென்று அந்த கும்பலில் 2 பேரை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 4 விதமான 500 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியை சேர்ந்த சிவசங்கர்(39), ரத்னபுரி சம்பத் வீதியை சேர்ந்த கார்த்திக் என்பதும் தெரியவந்தது. சிவசங்கர் அங்குள்ள மருந்து கடையில் ஊழியராகவும், கார்த்திக் காய்கறி கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்களுடன் இருந்தது ஆகாஷ், சிரஞ்சிவி, விவேக், சீனு கார்த்திக் என்பதும் தெரியவந்தது. இவர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் சிவசங்கர், கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் இதுபோன்று வேறு எங்காவது போதை மாத்திரைகளை விற்பனை செய்துள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.