சிறுத்தை தாக்கி இருவர் பலி: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு
- கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது.
- கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.
சென்னை:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் சிறுமி உள்பட 4 பேரை சிறுத்தை தாக்கி இருந்தது. அதில் படுகாயம் அடைந்த ஏலமன்னாவை சேர்ந்த சரிதா என்பவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை 3 வயது சிறுமியை கவ்வி இழுத்து சென்றது. கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த சிறுமி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தாள்.
இதையொட்டி சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் பந்தலூர் பஜார், தேவாலா பஜார், மேங்கோரேஞ்ச் பிரிவு ஆகிய 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 3 வயது குழந்தை உட்பட 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.