மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சகம் செய்யும்- வைகோ குற்றச்சாட்டு
- மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன்.
- கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும்.
மதுரை:
மதுரை செக்கானூரணியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இருந்து விமான மூலம் இன்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே துறை வரலாற்றிலேயே மிக கொடூரமான, கோரமான விபத்து ஒடிசாவில் ஏற்பட்டது. இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது சதி வேலையா? என்பது பிரச்சனைக்குரியதாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அப்படி சதி வேலையாக இருக்குமானால் அதை செய்தவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. கிட்டத்தட்ட 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள், 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே ரெயில் பயணம் என்பதே ஆபத்தை உண்டாக்கும் என்கிற பயத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த சூழலில் இதை தீவிரமாக ஆய்வு செய்து உண்மை காரணத்தை கண்டுபிடித்து, அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. இதில் தமிழக அரசு துரிதமாக செயல்பட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி வைத்து செயல்பட்டது பாராட்டுக்குரியதாகும்.
மேலும் மேகதாது அணை பிரச்சனைக்காக 12 வருடத்திற்கு முன்பாகவே ஆயிரம் பேரை திரட்டி நான் போராட்டம் நடத்தினேன். அப்போதே மேகதாதுஅணை கட்டியே தீருவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு பணமும் ஒதுக்கப்பட்டுவிட்டது. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு அதை வேடிக்கை பார்க்கும். அது தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கிருஷ்ண ராஜசாகரில் தண்ணீர் வந்து சேராமல் தமிழ்நாடு பஞ்சப் பிரதேசமாக ஆக்கப்படும். இது நமது தலைக்கு மேலே கத்தி போல தொங்கி கொண்டிருக்கும் பேராபத்து. மத்திய அரசு இதில் வஞ்சகம் செய்யும் என்பதுதான் என் குற்றச்சாட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பூமிநாதன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செய லாளர் முனியசாமி, பாஸ்கர் சேதுபதி, மகபூப்ஜான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த வைகோ, மதுரை 44-வது வார்டு கவுன்சிலர் தமிழ் செல்வியின் பேரனுக்கு ஆதித்த கரிகாலன் என்று பெயர் சூட்டினார்.