கிடப்பில் போடப்பட்ட வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம் பணி மீண்டும் தொடங்கியது
- வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே வேப்பம்பட்டு-பெருமாள்பட்டு இடையே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கடந்த 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்தபோது தந்தை மற்றும் 2 மகள்கள் ரெயில் மோதி பலியானார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாதியில் நிற்கும் மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ரெயில்வே மேம்பாலப்பணியை மீண்டும் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பணியை முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலைய மேம்பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் மீண்டும் தொடங்கியது. இதில் பூந்தமல்லி எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி, ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.