பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்- கருப்பு பேட்ஜ் அணிந்து பங்கேற்பு
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால், பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் 345 கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஈரோடு:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). இவர் நேற்று காலை பணியில் இருந்தபோது அலுவலகத்துக்குள் நுழைந்த 2 மர்ம நம்பர்கள் அரிவாளால் லூர்து பிரான்சிசை வெட்டினர்.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்து பிரான்சிஸ் பரிதாபமாக இறந்தார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.
இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு தாசில்தார் அலுவலகத்தில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் ஈரோடு வட்ட தலைவர் ஜான் தலைமை தாங்கினார். செயலாளர் பழனிவேல், பொருளாளர் கார்த்தி, மாவட்ட துணை தலைவர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் அனைவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர்.
மேலும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால், பணி பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் அந்தியூர், தாளவாடி, சத்தியமங்கலம், நம்பியூர், கோபிசெட்டிபாளையம், பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் தாசில்தார் அலுவலகத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் 345 கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். முன்னதாக படுகொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ்காக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.