தமிழ்நாடு

முதலை சிக்கியதால் கிராம மக்கள் நிம்மதி- வனத்துறையினருக்கு பாராட்டு

Published On 2024-09-19 04:45 GMT   |   Update On 2024-09-19 04:45 GMT
  • கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.
  • வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அன்னூர் அடுத்த பெள்ளேபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது பட்டக்காரனூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை ஒன்று தென்பட்டது.

இதனை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் குமார் தலைமையில் சுமார் 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் குட்டையில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு ஆழத்தில் பதுங்கிய முதலையை பிடிப்பதென தீர்மானிக்கப்பட்டது. அதன்ஒருபகுதியாக குட்டையில் உள்ள தண்ணீரை 2 மின்மோட்டார்கள் மூலம் வெளியேற்றும் பணி தொடங்கியது.

சுமார் 30 மணிநேரத்துக்கு பிறகு குட்டையில் இருந்த தண்ணீர் முழுமையாக வற்ற தொடங்கியது. அப்போது வற்றிய குட்டையின் ஆழத்தில் நேற்று மதியம் 1.30 மணியளவில் முதலை பதுங்கி கிடப்பது தெரியவந்தது.


தொடர்ந்து வனத்துறையினர் குட்டைக்குள் இறங்கி சகதிக்குள் கிடந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் தப்பிவிடாத அளவுக்கு கயிறுகள் மூலம் பிணைக்கப்பட்டன. தொடர்ந்து குட்டைக்குள் கிடந்த முதலையை தோளில் தூக்கியபடி வனத்துறையினர் கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அந்த முதலை பவானிசாகர் அணையில் ஆழமான பகுதியில் கொண்டு போய் விடப்பட்டது. முதலை உயிருடன் பிடிபட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். முதலையை பிடிக்க போராடிய வனத்துறையினருக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் இங்கு 2 முதலைகள் இருப்பதாக தகவலின்பேரில் தேடுதல் வேட்டை நடத்தினோம். ஆனால் அங்கு ஒரு முதலை மட்டுமே பிடிபட்டது. அந்த முதலை அணைப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது என்றனர்.

Tags:    

Similar News