பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: பவானி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
- பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.
மேட்டுப்பாளையம்:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக காரமடை அடுத்த பில்லூர் அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 100 அடி ஆகும்.
நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி குந்தா பகுதியில் 20 மி.மீ மழை பெய்து உள்ளது. இதேபோல கெத்தையில் 6 மி.மீ, பரளியில் 5 மி.மீ, பில்லூர் அணைப்பகுதியில் 6 மி.மீ, அவலாஞ்சியில் 382 மி.மீ, அப்பர் பவானியில் 41 மி.மீ மழையும் பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதனால் அங்கு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக உள்ளது. எனவே பில்லூர் அணை விரைவில் நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து பவானி ஆற்றில் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. எனவே அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதிலும் குறிப்பாக மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, ஓடந்துறை, லிங்காபுரம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, காந்தவயல் உள்ளிட்ட பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பவானி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ, துணி துவைக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது.