கச்சத்தீவு இலங்கையின் பகுதி என கூறிய பாஜக அரசு தற்போது ஏன் மாற்றி பேசுகிறது: ப சிதம்பரம்
- 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?
- தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?
கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர். கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"பழிக்கு பழி என்பது பழைய ஆயுதம். ட்வீட்டுக்கு ட்வீட் என்பது புதிய ஆயுதம். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27-1-2015 தேதியிட்ட RTI பதிலைப் பார்க்கவும். அப்போது ஜெய்சங்கர்வெளியுறவுத்துறை செயலராக இருந்தார் என்று நான் நம்புகிறேன். அந்த பதிலில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், வெளிவிவகாரதுறை அமைச்சரும், அவரது அமைச்சகமும் ஏன் இப்போது மாற்றி பேசுகிறார்கள்? ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாக ஜெய்ஷங்கர் பேசிவருகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், "கடந்த 50 ஆண்டுகளில் தமிழக மீனவர்களை இலங்கையே கைது செய்துள்ளது உண்மைதான். அதேபோன்று பல இலங்கை மீனவர்களை இந்தியா கைது செய்துள்ளது.
இந்தியாவை ஆட்சி செய்த ஒவ்வொரு அரசாங்கமும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது மீனவர்களை விடுவித்துள்ளன. ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இதுதான் நடந்துள்ளது.
ஜெய்சங்கர் காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் எதிராக ஏன் பேசுகிறார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் தமிழக மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?
2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார்.