தமிழ்நாடு

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த யானையை காணலாம்.

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்த காட்டு யானைகள் கூட்டம்

Published On 2022-09-15 04:52 GMT   |   Update On 2022-09-15 04:52 GMT
  • யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.
  • குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ளது பாடந்தொரை மற்றும் செலுக்காடி பகுதி.

இந்த பகுதிகள் வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

குறிப்பாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு காட்டுயானைகள் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக ஊருக்கு மத்தியில் உள்ள சாலைகளில் ஒய்யார நடைபோட்டு சென்றன.

பின்னர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த யானைகள் அங்குள்ள வீடுகளின் முன்பு சில நிமிடங்கள் நின்று பார்த்து விட்டு தெருக்களில் சுற்றி திரிந்தன.

யானைகள் நடமாட்டம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.

வீடுகளில் இருந்தபடியே யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். சிறிது நேரம் கழித்து யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. அதன்பின்னரே மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதனால் இரவு நேரங்களில் வெளியூர் சென்று வீடு திரும்புவர்கள் அச்சம் அடைகின்றனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளது.

குட்டிகளுடன் வரும் யானைகள் குட்டிகளை பாதுகாக்க சாலையில் வரும் வாகனங்களை தாக்கி சேதப்படுத்துகின்றன. இதனால் அந்த சாலைகளில் செல்ல வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர்.

எனவே, வனச்சரகத்தினா் மலை கிராமத்தில் முகாமிட்டு குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் காட்டுயானைகள் கூட்டத்தை அடா்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலை கிராமத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News