தமிழ்நாடு (Tamil Nadu)

எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?

Published On 2023-01-20 08:29 GMT   |   Update On 2023-01-20 08:29 GMT
  • இந்திய தேர்தல் ஆணையத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்தை சந்திக்க தயாராகி வருகின்றனர்.

சென்னை:

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பொதுக்குழுவில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எடப்பாடி தரப்பினர் அனுப்பினர். அது பரிசீலனையில் இருந்து வருகிறது.

இதேபோல ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. சட்டவிதிகளின்படி ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்வதாகவும் சட்ட விதிகளை மாற்றம் செய்ய முடியாது என்றும் கூறி வருகிறார்.

அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களை கொண்ட கிளையில் இருந்து தான் சட்டவிதிகளை மாற்ற முடியும். எனவே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிய ஆவணங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடிதம் கொடுத்துள்ளது.

ஆனால் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் தான் சமீபத்தில் தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்ற முறையில் கடிதம் அனுப்பி உள்ளது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் 2 பிரதிநிதிகள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

இருவரும் ஒன்றாக இருந்தபோது கடந்த தேர்தலில் த.மா.கா.விற்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இப்போது இரு துருவங்களாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்பட்டு வருகிறார்கள்.

இதனால் இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வமும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தவே ஆர்வம் காட்டுகிறார்கள்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே இரட்டை இலை சின்னம் குறித்த முடிவை பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

இதுகுறித்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலர் கூறும்போது, 'இரட்டை இலை சின்னம் பெறுவதில் இருதரப்பினருக்கும் சிக்கல் இருக்கும்பட்சத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்று இணைவது தான் நல்ல முடிவாகும். அதற்கான வாய்ப்பாக இந்த இடைத்தேர்தல் உள்ளது' என்றனர்.

இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தீவிரமாக இருக்கும் நிலையில் பா.ஜ.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரையில் உறுதிப்படுத்தாத நிலையே உள்ளது.

இருவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே தலைமையின் விருப்பமாக இருப்பதால் இந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை பா.ஜ.க. எடுக்கும் என்பது மதில்மேல் பூனையாக உள்ளது. ஆனால் பா.ஜ.க. ஆதரவு அணிக்கு தான் இரட்டை இலை ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அதனால் டெல்லியில் ஆதரவை பெற இருவரும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தையும் எடப்பாடி பழனிசாமி அணியினர் அடுத்த வாரம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் சட்ட நிபுணர்களுடன் செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதேபோல ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இரட்டை இலையை பெற அழுத்தம் கொடுக்க தேர்தல் ஆணையத்தை சந்திக்கவும் தயாராகி வருகின்றனர்.

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாதபட்சத்தில் தனி சின்னத்தில் நிற்கவும் எடப்பாடு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தயாராகி வருகின்றனர்.

Tags:    

Similar News