"3% - 4% வாக்கு வங்கி உள்ள பாஜகவில் நான் சேருவதா?: எஸ்.பி.வேலுமணி விளக்கம்
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.