நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்த புகார்.. அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி கைது
- அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
- ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவையில் உள்ள ஈஷா மையம் மற்றும் அதன் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்து நக்கீரன் இதழ் தொடர்ந்து அவதூறு பரப்புவதாக கூறி அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜுன் சம்பத்தின் மகனும், அக்கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஓம்கார் பாலாஜி, நக்கீரன் கோபாலுக்கு மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே தன் மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, இன்று ஓம்கர் பாலாஜி நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ஓம்கார் பாலாஜி 'நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு' மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி' என்ற வார்த்தை இல்லாமல் 'தானாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக' தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் நேரில் ஆஜராக சென்னை வந்திருந்த ஓம்கார் பாலாஜியை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஓம்கார் பாலாஜி கோவைக்கு செல்லப்பட்டுள்ளார்.