தமிழ்நாடு (Tamil Nadu)

குக்கர் தயாரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து

Published On 2024-10-25 09:00 GMT   |   Update On 2024-10-25 09:00 GMT
  • பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
  • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேக்ராஜ் (50) என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர் .

தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தூரத்தில் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீ அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனம் பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது.

மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News