தமிழ்நாடு (Tamil Nadu)

தமிழக வெற்றி கழகத்துக்கு அங்கீகாரம் அளித்தது தேர்தல் ஆணையம்

Published On 2024-10-25 18:10 GMT   |   Update On 2024-10-25 18:10 GMT
  • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது.
  • விஜய் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

சென்னை:

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை மறுநாள் மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக மாநாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

மாநாட்டு திடலில் கிழக்கு திசை நோக்கியவாறு 60 அடி அகலத்திலும், 170 அடி நீளத்திலும், 30 அடி உயரத்திலும் மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் கொள்கை குறித்தும், தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் விஜய் பேச உள்ளதால் பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

இதற்கிடையே, விஜய் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி கேட்டுக் கொண்டு வருகிறார்கள். விழுப்புரம் மக்களுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். இதனால் விக்கிரவாண்டி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு பின் புதிதாகப் பதிவுசெய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரியில் த.வெ.க. பதிவுசெய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியது.

Tags:    

Similar News