சிதறி கிடக்கும் பட்டாசு குப்பைகள்- தூய்மைப்பணியில் பணியாளர்கள் தீவிரம்
- நேற்று வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது.
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடித்து தீபாவளியை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன. 200 வார்டுகளிலும் பட்டாசு குப்பைகளை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
சென்னை மெரினா, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக தூய்மைப்பணியாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டாசு குப்பைகள் குறைவாக உள்ளது. திட, திரவ கழிவுகள், பட்டாசு குப்பைகள், கம்பிகள் என தரம் பிரித்து கொண்டு சேர்ப்போம். இந்த பகுதியில் காலையில் தெரு முழுவதும் குப்பைகள் அதிகமாக இருந்தது. இன்னும் 2 மணி நேரத்தில் திருவல்லிக்கேணி முழுவதும் சுத்தமாகி விடும் என்று தெரிவித்தார்.