தமிழ்நாடு

அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக - முதல் மாநாட்டிலேயே தெளிவுபடுத்திய விஜய்

Published On 2024-10-27 14:39 GMT   |   Update On 2024-10-27 14:39 GMT
  • தமிழக மக்கள் மதத்தை கடந்து ஒன்றுசேருவார்கள்.
  • இங்கு சாதி இருக்கும். ஆனால் அது சைலண்டா தான் இருக்கும்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக இன்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. தவெக மாநாடு நடைபெறும் திடலுக்கு விஜய் வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து மக்களிடையே உரையாற்றிய விஜய், "பெரியார் எங்கள் கொள்கை தலைவர். இதை சொன்னவுடனே ஒரு கூட்டம் பெயிண்ட் டப்பாவை தூக்கிட்டு கிளம்பிடுவாங்க. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப்போவது இல்லை. அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கையில் நாங்கள் தலையிட போவதும் இல்லை.

அறிஞர் அண்ணா கூறிய ஒன்றே குலம் ஒருவனே தேவன் தான் எங்களின் நிலைப்பாடு. ஆனாலும் பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமீக நீதி, பகுத்தறிவு சிந்தனை ஆகிய எல்லாவற்றையும் நாம் முன்னெடுத்து செல்ல போகிறோம்.

தமிழக மக்கள் மதத்தை கடந்து ஒன்றுசேருவார்கள். இங்கு சாதி இருக்கும். ஆனால் அது சைலண்டா தான் இருக்கும். சாதியை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மக்களை சாதி, மதம், பாலினம், இனம் , மொழி, ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து ஆளும் பிளவுவாத அரசியல் சிந்தாந்தம் தான் நமக்கு முதல் எதிரி

இந்த நாட்டையே பாழ்ப்படுத்துற பிளவுவாத அரசியல் செய்றவங்க தான் எங்கள் கட்சியில் முழு முதல் கொள்கை எதிரி. அடுத்து திராவிட மாடல்னு சொல்லிக்கிட்டு பெரியார், அண்ணா பேரை வைச்சி தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற குடும்ப சுயநல கூட்டம் தான் நம்மோட அடுத்த எதிரி" என்று தெரிவித்தார்.

தனது கட்சியின் முதல் மாநாட்டிலேயே எனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்பதை விஜய் தெளிவுபடுத்திவிட்டார்.

Tags:    

Similar News