எனக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பா?.. சவுக்கு சங்கர் விளக்கம்
- பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே உள்ளார்.
- சவுக்கு சங்கருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே உள்ள சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அக்டோபர் 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினார் .
இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது. திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.