பள்ளிகளுக்கு வராத ஆசிரியா்கள் மீது கடும் நடவடிக்கை- தொடக்கக் கல்வி இயக்குநா் உத்தரவு
- பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும்.
- விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
சென்னை:
தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்பேரில், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து வருகின்றனா். அப்போது, பள்ளிகளுக்கு முறையாக வராத ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், தருமபுரி-அரூா் கல்வி மாவட்டத் துக்குட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியா் பாலாஜி இடைநீக்கம் செய்யப்பட்டாா். அதற்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா்.
இந்த சம்பவத்தையடுத்து பள்ளிக்கு முறையாக வராத ஆசிரியா்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி, பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியா்கள் பணிக்கு வராமல் வேறுநபா் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டாலோ அல்லது அதுதொடா்பான புகாா்கள் பெறப்பட்டாலோ அதன் மீது தனிக்கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.
அந்த விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நிகழும்போது அதன் விவரத்தை உயா் அதிகாரிகளுக்கு வழங்க தவறும்பட்சத்தில் தலைமையாசிரியா்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் மீதும் துறைசாா்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.