மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்
- விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
- டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குத்தாலம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா மரத்துறையைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 28) என்பவருக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தை சுயநினைவின்றி இருந்தது.
இதனால் சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்தது. மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் குழந்தை இறந்தது என்று கூறி பெற்றோர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பெற்றோர் உறவினர்களிடம் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் பானுமதி விசாரணை நடத்தினார். பின்னர் விசாரணையின் அடிப்படையில் பிரசவம் பார்த்த டாக்டர் ரம்யாவை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
டாக்டர்களிடம் உரிய விசாரணை செய்யாமல் பெற்றோர்கள் உறவினர்களிடம் விசாரணை செய்ததன் அடிப்படையில் டாக்டர் ரம்யா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று மயிலாடுதுறையில் புறநோயாளிகள் பிரிவு சிகிச்சையை டாக்டர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் 21 டாக்டர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் டாக்டர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள அனைத்து அவசர சிகிச்சை பிரிவுகள் இயங்கி வருகிறது. ஆனால் புறநோயாளிகள் பிரிவில் மருத்துவம் பார்ப்பதற்காக நோயாளிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையில் காலை 7:00 மணி முதல் தற்போது வரை நோயாளிகள் காத்து கிடைக்கின்றனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்த முதியவர்கள் என ஏராளமானோர் டாக்டர்கள் இல்லாததால் திரும்பி வேறு மருத்துவமனைக்கு செல்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.