செய்திகள் (Tamil News)

நைஜீரியாவில் கிராம மக்களை சுட்டுக்கொன்ற போகோஹரம் தீவிரவாதிகள் 3 பெண்களை கடத்திச் சென்றனர்

Published On 2016-06-15 06:01 GMT   |   Update On 2016-06-15 06:01 GMT
நைஜீரியாவில் 276 பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட ஊரின் அருகேயுள்ள கிராமத்துக்குள் நுழைந்த போகோஹரம் தீவிரவாதிகள் கிராம மக்களை சுட்டுக் கொன்றதுடன் 3 பெண்களையும் கடத்திச் சென்றனர்.
நைஜர்:

கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் சமஅளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கின்றனர்.

வடக்கு நைஜீரியாவில் உள்ள சில சிறிய நகரங்களை கைப்பற்றியுள்ள போகோஹரம் தீவிரவாதிகள், தற்போது, வடகிழக்கு மாநிலங்களின் தலைநகரான மைடுகுரியை கைப்பற்றும் நோக்கத்தில் அவ்வப்போது இப்பகுதியில் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியா நாட்டின் வடகிழக்கு எல்லையோரப் பகுதியான சிபோக் நகரின் அருகேயுள்ள கவுட்டுவா கிராமத்துக்குள் நேற்று அதிகாலை கும்பலாக வந்த போகோஹரம் தீவிரவாதிகள் அங்கிருந்த வீடுகளை தீயிட்டு கொளுத்தியதுடன், கிராம மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிகளால் சுட்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

அங்கிருந்த உணவுப் பொருட்களை கொள்ளையடித்த அந்த கும்பல் மூன்று பெண்களை தூக்கிச் சென்றதாக அந்த கிராமத்தினர் தெரிவித்தனர். இந்த கிராமத்துக்கு அருகேயுள்ள சிபோக் நகரில் உள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடந்த 2014-ம் ஆண்டு போகோஹரம் தீவிரவாதிகள் கடத்திச் சென்றது நினைவிருக்கலாம்.

கடந்த ஏழாண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகளின் வெறியாட்டத்துக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News