செய்திகள் (Tamil News)

வங்காளதேசத்தில் போலீஸ் தீவிர தேடுதல் வேட்டை: சண்டையில் 5 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் உயிரிழப்பு

Published On 2017-05-11 10:08 GMT   |   Update On 2017-05-11 10:08 GMT
வங்காளதேசத்தில் தீவிரவாதிகள் மறைந்திருந்த பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது நடந்த மோதலில் 5 தீவிரவாதிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
டாக்கா:

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள உணவகத்தில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினரும் போலீசாரும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததும், அப்பகுதிக்கு சென்று தீவிரமாக கண்காணிக்கின்றனர். இந்த தேடுதல் வேட்டைகளில் இதுவரை தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வகையில், டாக்காவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு பகுதியில் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஜமாத்-அல்-முஜாகிதீன் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்து அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். போலீசாரும் பதிலடி கொடுத்து முன்னேறினர். இதனால் தீவிரவாதிகள் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். இந்த தற்கொலை தாக்குதலில் 5 தீவிரவாதிகள் மற்றும் ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தனர்.

Similar News