செய்திகள் (Tamil News)

நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இந்திய பெண் முறையீடு

Published On 2017-05-12 13:04 GMT   |   Update On 2017-05-12 13:04 GMT
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள இந்திய பெண், நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இஸ்லாமாபாத்:

இந்தியாவை சேர்ந்தவர் உஸ்மா (வயது 20). இவர் மலேசியா சென்று இருந்தபோது பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலி என்பவரை காதலித்து பாகிஸ்தான் சென்று சமீபத்தில் அவரை திருமணம் செய்துள்ளார்.

பின்னர் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்த அவர், தனது கணவர் தன்னை மிரட்டி திருமணம் செய்ததாகவும், அவருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருந்ததை மறைத்து ஏமாற்றிவிட்டதாகவும் இஸ்லாமாபாத் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். தன்னை இந்தியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும் வரை தூதரகத்தை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் கூறியிருந்தார்.


இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் உஸ்மா சார்பில் அவரது வழக்கறிஞரும், இந்திய தூதரக முதன்மை செயலாளரும் இன்று மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தனது உறவினர்களை பார்ப்பதற்கு பாகிஸ்தானுக்கு வந்ததாகவும், தாஹிருக்கு ஏற்கனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பது தனக்கு தெரியாது என்றும் உஸ்மா கூறியுள்ளார்.

மேலும், “என் மீது காவல் நிலையத்தில் புகார் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இந்தியாவுக்கு திரும்பி செல்வதற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்களை கணவர் பறித்துக்கொண்டுவிட்டார். எனவே, டூப்ளிகேட் பயண ஆவணங்கள் வழங்கும்படி வெளியுறவுத்துறைக்கு கோர்ட் உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றும் உஸ்மா கூறியுள்ளார்.

Similar News