செய்திகள் (Tamil News)

வியட்நாம் நாட்டை தாக்கிய டோக்சுரி புயல்: 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

Published On 2017-09-15 07:50 GMT   |   Update On 2017-09-15 07:51 GMT
வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியை மணிக்கு 130 கிலோமீட்டர வேகத்தில் இன்று தாக்கிய டோக்சுரி புயல் அங்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹனாய்:

வியட்நாம் நாட்டின் மத்திய பகுதியை சமீபகால வரலாறு காணாத பெரும் புயல் இன்று தாக்கியது. டோக்சுரி என பெயரிடப்பட்டுள்ள இந்த பெரும் புயல் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் கடலோரப் பகுதிகளை துவம்சம் செய்தது.

ஹா டின்ஹ் மற்றும் குவாங் பின்ஹ் மாகாணங்களை உக்கிரத்துடன் பதம்பார்த்த புயலின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 250-க்கும் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. புயலுடன் பெய்த பலத்த மழையால் ஹா டின்ஹ் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது.

மரங்கள், விளக்கு கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பல இடங்களில் சாய்ந்து விழுந்ததால் இவ்விரு மாகாணங்களிலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய 4 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து, மூழ்கின. கரையோரம் கட்டி வைத்துள்ள மரப்படகுகளை கடல் அலைகள் இழுத்து செல்வதை தவிர்க்கும் வகையில் பல மீனவர்கள் தங்களது படகுகளை தூக்கிவந்து தெருக்களில் பாதுகாத்து வைத்தனர்.


முன்னதாக, புயல் தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்துவந்த சுமார் 80 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வியட்நாம் நாட்டின் வடபகுதியில் உள்ள தலைநகரான ஹனாய் பகுதியை நாட்டின் தென்பகுதியில் உள்ள தொழில் நகரமான ஹோச்சி மின் நகருடன் இணைக்கும் 46 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து புயல் மற்றும் கனமழை அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வியட்நாம் நாட்டின் வடபகுதியில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு வீசிய புயல்களுக்கு 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News