செய்திகள் (Tamil News)

அமெரிக்க பொருளாதார தடையால் ஈரானில் பண மதிப்பு சரிந்தது

Published On 2018-06-27 07:47 GMT   |   Update On 2018-06-27 07:47 GMT
யுரேனியம் செறிவூட்டும் விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் அதன் நட்புறவு நாடுகள் தடை விதித்துள்ளதால் ஈரானின் பணமதிப்பு (ரியால்) வீழ்ச்சி அடைந்துள்ளது.
தெக்ரான்:

ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வளர்ந்த நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. அதில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.

அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடை விதிப்பதாக அறிவித்தது. மேலும் தனது நட்பு நாடுகளையும் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் ஈரானின் பணமான ரியாலின் மதிப்பு குறைந்துள்ளது. பொருட்களின் இறக்குமதிக்கான செலவு அதிகரித்துள்ளது. ஈரானின் பணமதிப்பு மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்ததால் வர்த்தகர்கள் தெக்ரானில் பாராளுமன்றம் முன்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்கும் விதமாக ஈரான் மக்களிடையே அந்நாட்டு அதிபர் ஹசன் ரக்கானி டி.வி.யில் உரையாற்றினார். அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் அமெரிக்கா மீதான நன் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியான முறையில் ஆக்கபூர்வமான தேவைகளுக்கு யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளது. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நடைமுறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவர மாட்டோம். ஈரானின் பொருளாதாரம் சமீப காலமாக சீராக சென்று கொண்டிருக்கிறது. அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை.

நம்மிடம் போதுமான அளவுக்கு சர்க்கரை- கோதுமை மற்றும் சமையல் எண்ணை உள்ளது. மார்க்கெட்டில் செலுத்த தேவைப்படும் அன்னிய செலாவணி இருப்பு உள்ளது’’ என்றார். #IranRiyal
Tags:    

Similar News