செய்திகள்

யூடியூப் சேனலுக்காக குழந்தை நட்சத்திரங்கள் சித்ரவதை- வளர்ப்பு தாய் கைது

Published On 2019-03-22 05:23 GMT   |   Update On 2019-03-22 05:23 GMT
அமெரிக்காவில் யூடியூப் சேனலில் சரியாக நடிக்க வேண்டும் என்பதற்காக தத்தெடுத்த குழந்தைகளை சித்ரவதை செய்த வளர்ப்பு தாய் கைது செய்யப்பட்டுள்ளார். #Adoptivemotherarrested #YoutubeChannel
வாஷிங்டன்:

உலகளவில் தற்போது இருக்கும் இணையதள வசதிகள் கொண்டு, யார் வேண்டுமென்றாலும் பிரபலம் ஆகலாம் என்றாகிவிட்டது. யூடியூப் எனும் இணையதளம் உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட்போன் மூலம் பல முறைகளில் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பிரபலங்களாக மாற்றி வருகின்றனர்.

அவ்வகையில் உருவாக்கப்பட்டது தான் 'ஃபெண்டாஸ்டிக் அட்வெஞ்சர்ஸ்' எனும் யூடியூப் சேனல். இதனை மச்செல் ஹாக்னி(48) எனும் பெண் உருவாக்கியுள்ளார்.  இதற்காக 6-15 வயதுடைய, 7 குழந்தைகளை தத்தெடுத்து, குழந்தை நட்சத்திரங்களாக வளர்த்துள்ளார்.



இந்த யூடியூப் சேனலை 8 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். இந்த சேனலின் ஒவ்வொரு வீடியோவும் 25 லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த சேனலில் பிரபலமான குழந்தைகள் பங்கு பெறும் 'குக்கி கேப்ச்சர் மிஷன்' மற்றும் 'சூப்பர் பவர் பேபி பேட்டில்' எனும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகள் சரியாக நடிக்கவில்லை என்றாலோ, ஒரு வசனத்தை மறந்தாலோ, உணவு, தண்ணீர் என எதுவும் கிடைக்காது. சில நேரங்களில் ஐஸ் கட்டியில் குளிக்க சொல்வதுமுண்டு. குழந்தைகளை ஒரு இருட்டு அறையில் அடைத்து 2,3 நாட்கள் அப்படியே பசியிலும், தாகத்திலும் விட்டுவிடுவதும் உண்டு. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட 7 குழந்தைகளும் சில ஆண்டுகளாக பள்ளிக்கு அனுப்பப்படுவதில்லை.

இதுபோன்ற சித்ரவதைகளை தொடர்ந்து, 7 குழந்தைகளில் 6 குழந்தைகள் போலீசாரை நாடியுள்ளனர். இதையடுத்து கடந்த வாரம் போலீசார் ஹக்னியின் வீட்டிற்கு சென்றனர். அப்போது குழந்தைகள் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை மீட்டு, போலீசார் விசாரணை நடத்த துவக்கினர். இதில் குழந்தைகள் மிகவும் ஆரோக்கியம் இழந்து இருப்பதை கண்டு முதலில் தண்ணீர், உணவு கொடுத்துள்ளனர்.

இதில் ஒரு குழந்தை 20 நிமிடத்தில் 3 பாட்டில் தண்ணீர் குடித்தது. மற்றொரு குழந்தை போலீசார் வாங்கி கொடுத்த சிப்ஸினை கடுமையான பசியுடனும், தாயின் மீதான அச்சத்துடனும் தின்றது.

இதனையடுத்து போலீசார் ஹக்னி மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்தனர். இந்நிலையில் ஹக்னியின் யூடியூப் சேனலை தற்காலிகமாக முடக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Adoptivemotherarrested #YoutubeChannel

 
Tags:    

Similar News