செய்திகள் (Tamil News)
கோப்புப்படம்

நைஜீரியாவில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்கள் கடத்தல்

Published On 2021-05-31 18:53 GMT   |   Update On 2021-05-31 18:53 GMT
நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.
அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.

இவர்களின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 27 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி இவர்கள் பள்ளி மாணவ மாணவிகளை கடத்திச் சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதேபோல் போகோஹரம் தவிர நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தும் இன்னும் பல பயங்கரவாத அமைப்புகள் மாணவ மாணவிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு அரசிடம் இருந்து பணம் மற்றும் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்கின்றன.

அந்த வகையில் நைஜீரியாவில் அண்மை காலமாக பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து மாணவ மாணவிகள் கடத்தப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள நைஜர் மாகாணத்தின் தெகினா நகரில் இஸ்லாமிய பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது.

நேற்று முன்தினம் மாலை இந்த பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்து இறங்கிய பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் பள்ளிக்கூடத்துக்குள் நுழைந்தனர்.

பின்னர் அவர்கள் வகுப்பறைகளுக்குள் புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.

எனினும் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

பின்னர் 200 மாணவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்த பயங்கரவாதிகள் லாரியை கொண்டு வந்து, அதில் மாணவர்களை ஏற்றி கடத்தி சென்றனர்‌. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜம்பாரா மாகாணத்தில் ஜங்கேபே என்ற கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து 300 மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்தி சென்றதும், பின்னர் பயங்கரவாதிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை மீட்டதும் குறிப்பிடத்தக்கது.

Similar News