உலகம்
சீனாவில் கியாஸ் கசிந்து வெடிவிபத்து

சீனாவில் கியாஸ் கசிந்து வெடிவிபத்து - அரசு கட்டிடம் இடிந்து 16 பேர் பலி

Published On 2022-01-08 07:38 GMT   |   Update On 2022-01-08 07:38 GMT
சீனாவின் வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
பீஜிங்:

சீனாவின் தென் மேற்கு பகுதியில் உள்ள வூலாங் மாவட்டம் சோங்கிங் நகரில் அரசு துணை மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

மதிய உணவு இடைவேளையின் போது ஊழியர்கள் அங்குள்ள அறையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. கியாஸ் கசிந்து தீப்பிடித்ததில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த வெடிவிபத்தில் அரசு கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. கட்டிட இடிபாடுகளில் ஊழியர்கள் சிக்கிக் கொண்டனர். உடனே போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரவு முழு வதும் மீட்பு பணி நடந்தது.

இந்த விபத்தில் 16 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 10 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் ஒருவரது நிலைமை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள் கூறும் போது, ‘வெடி விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் நள்ளிரவில் மீட்கப்பட்டன’ என்று தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News