மியான்மரில் கடலில் படகு கவிழ்ந்து 7 பேர் பலி
- கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது.
- மாயமான 30-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
நேபிடாவ்:
அண்டை நாடான மியான்மரில் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான அரசாங்கத்தை அகற்றி விட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
ஆனால் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுகிறது.
இந்தநிலையில் தனிந்தரி பிராந்தியம் கியாக் கார் நகரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.
அப்போது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இருதரப்பு மோதல் தீவிரம் அடைந்ததால் அந்த பகுதி முழுவதும் போர்க்களம் போல மாறியது. எனவே அங்குள்ள முக்கிய சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இதனால் உயிருக்கு பயந்து கடல் வழியாக தப்பி ஓட முயன்றனர். அதன்படி 80-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஒரு படகு புறப்பட்டது. ஆனால் பாரம் தாங்காமல் அந்த படகு நடுக்கடலில் கவிழ்ந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அப்போது கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்றது. எனினும் இந்த சம்பவத்தில் 7 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். மாயமான 30-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.