அமெரிக்காவில் சோகம் - ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்று உயிரிழந்த இந்திய மாணவர்கள்
- ஏரியில் மூழ்கிய நண்பரை காப்பாற்ற சென்று 2 இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர்.
- மாணவர்கள் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் ஒஜார்க்ஸ் என்ற இடத்தில் வார இறுதி நாளில் திருவிழா கொண்டாட்டம் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 2 மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களில் ஒருவர் ஏரியில் குதித்து நீச்சல் அடித்துள்ளார். நீரின் ஆழத்திற்கு சென்ற அவர் அதன்பின் மேலே வரவே இல்லை. இதனால் உடன் சென்ற அவரது நண்பர் பதற்றமடைந்து, நண்பரை காப்பாற்ற எண்ணி, அவரும் நீருக்குள் குதித்து அவரை தேடினார். இந்த சம்பவத்தில் இருவரும் நீருக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
தெலுங்கானாவைச் சேர்ந்த இருவரும் அமெரிக்காவில் உள்ள மாகாண பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர் என மிசோரி மாகாண போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், அவர்கள் உத்தெஜ் குந்தா (24), சிவா கெல்லிகாரி (25) என அடையாளம் காணப்பட்டனர். இதனால் அவர்களது உறவினர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக, தெலுங்கானா மந்திரி கே.டி.ராமராவ் கூறுகையில், இந்திய மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கான உதவிகளை மேற்கொள்ளும்படி எனது குழுவினரை கேட்டு கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.