3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு வருகிறது - அமெரிக்க நிதி அமைச்சகம்
- 2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது.
- இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான் காரணம் என கூறப்படுகிறது.
வாஷிங்டன்:
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை அலையாக தாக்கும் கொரோனாவால் உலக நாடுகளில் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. பிறகு தடுப்பூசியின் பயன்பாடு அமலுக்கு வந்தபின் பொருளாதாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றன.
இந்நிலையில் 3 கொரோனா அலைகளை சந்தித்து இருந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டும் வருவதாக அமெரிக்க நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது. அதன்பின் 2021-ம் ஆண்டின் மையப்பகுதியில் இந்திய பொருளாதாரம் கொரோனாவுக்கு முந்தைய நிலையை நோக்கி சென்றது. தற்போது 2021-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவிதமாக உயர்ந்துள்ளது.
இதற்கு காரணம் 2021-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான்.
தடுப்பூசி பயன்பாடு பின்னடைவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியது. 2022-ம் ஆண்டு தொடங்கியது முதல் இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலையான ஒமைக்ரான் பரவத்தொடங்கியது.
ஆனால், ஒமைக்ரானால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மிகவும் குறைவாக இருந்தது. அதேபோல், ஒமைக்ரான் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தைவில்லை.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.