உலகம்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஜோ பைடன் சந்திப்பு

உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட ஜோ பைடன்... ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாக உறுதி

Published On 2023-02-20 12:42 GMT   |   Update On 2023-02-20 12:42 GMT
  • ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்தார் அமெரிக்க அதிபர்
  • நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தனது ராணுவ நடவடிக்கைகளை தொடங்கி ஒரு வருடம் ஆக உள்ளது. ரஷியாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை வழங்க உள்ளதாக நட்பு நாடுகள் கூறி உள்ளன. இதனால் வரும் நாட்களில் போர் தீவிரமடையலாம்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று திடீரென உக்ரைன் வந்தார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் வந்த அவர், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து, சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இரு தரப்பும் உக்கிரமான தாக்குதலை தொடங்குவதற்கு தயாராகி வரும் நிலையில், ஜோ பைடனின் இந்த திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பின்போது உக்ரைனுக்கு நீண்டதூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் கேட்டுக்கொண்டார். உக்ரைனுடன் அமெரிக்கர்கள் துணை நிற்பதாகவும், உலகம் உங்களுடன் நிற்கிறது என்றும் ஜோ பைடன் கூறினார். ஆயுத விநியோகத்தை அதிகரிப்பதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

உறுதியளித்தபடி ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்தவேண்டும் என நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அழுத்தம் கொடுக்கிறது. உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க மேற்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News