உலகம்

அதிகரிக்கும் நிமோனியாவால் அச்சத்தில் மக்கள்: காரணம் என்ன?

Published On 2023-11-24 08:05 GMT   |   Update On 2023-11-24 08:05 GMT
  • கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
  • உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது

கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.

கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.

மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:

புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News