உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்குதல் - பலி எண்ணிக்கை 35 ஆனது
- அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த ஏவுகணை தாக்குதலில் பலி எண்ணிக்கை 35 ஆனது.
- மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்திவருகின்றன. டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தைக் குறிவைத்து ரஷியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.
குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அங்கு மீட்பு பணி நடைபெறுகிறது.
இந்த தாக்குதலில் 15 வயது சிறுமி உள்பட 21 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியானது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.
இத்தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பில் பல வீடுகள் சேதமடைந்தன. நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர் என அதிபர் மாளிகையின் மூத்த அதிகாரி கைரிலோ திமோஷென்கோ கூறினார்.
இந்நிலையில், உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பில் நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், மாயமான 35 பேரை தேடி வருகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.