உலகம்

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு- அதிர்ச்சி தகவல்

Published On 2024-03-23 06:37 GMT   |   Update On 2024-03-23 07:23 GMT
  • அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
  • எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம்.

லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சின் மனைவியான இளவரசி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் பொது வெளியில் தோன்றவில்லை.

இதனால் அவரது உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியானது. அதன்பின் கேத் மிடில்டன், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் இந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கேத் மிடில்டன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை வீடியோ மூலம் கேத் மிடில்டன் உறுதி செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது:-

லண்டனில் ஒரு பெரிய ஆஸ்பத்திரியில் வயிற்று அறுவை சிகிச்சைக்கு நான் உட்படுத்தப்பட்டேன். அறுவை சிகிச்சை வெற்றி கரமாக இருந்தது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனக்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என எனது மருத்துவக் குழு அறிவுறுத்தியது. இப்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி நாங்கள் இது குறித்த விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் இருந்தோம். நோய் பாதிப்பு குறித்த தகவல் எனக்கும், வில்லியம்சுக்கும் அதிர்ச்சி அளித்தது.அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வர எனக்கு நேரம் எடுத்தது. அதன் பிறகே இந்த சிகிச்சையை தொடங்க முடிந்தது. எங்களது பிள்ளைகளிடம் இதனை அவர்களுக்கு புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் நலமுடன் இருக்கிறேன். இதிலிருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறேன்.

ஒவ்வொரு நாளும் மனதளவிலும், உடல் அளவிலும் வலுப்பெறுகிறேன். இதைதான் பிள்ளைகளிடம் தெரிவித்துள்ளேன் என்றார். அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு குறித்த முழு விவரம் வெளியாகவில்லை.

இங்கிலாந்து மன்னரும், மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News