டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய தயார்-முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ்
- அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது.
- அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் குதித்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதால் அதிபர் தேர்தல் களம் சூடாகி இருக்கிறது.
டிரம்ப் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டில் சிக்கியவர். இவரது முதல் மனைவி இவானா. இருவருக்கும் கடந்த 1977-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் மார்லா மேப்பிள்ஸ் என்ற பெண்ணுடன் டிரம்புக்கு தொடர்பு ஏற்பட்டது. இவர்களது இந்த உறவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து 1993-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 1997-ம் ஆண்டு இந்த திருமண உறவு முறிந்தது. இருவரும் பிரிந்தனர். சமீபத்தில் மார்லா மேப்பிள்ஸ் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
இதற்கிடையில் தனது முன்னாள் கணவரான டிரம்புக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, `எனது மகளின் தந்தையை நான் நன்கு அறிவேன். அவர் (டிரம்ப்) எந்த குற்றத்தையும் செய்திருக்க மாட்டார் என நம்புகிறேன். அவர் நிரபராதி. அவருக்கு எதிராக பல சட்ட சிக்கல்கள் இருந்தாலும் நாங்கள் அவருக்கு ஆதரவாக தான் இருக்கிறோம்.
அதிபர் தேர்தலில் அவருக்கு ஆதரவாக பிரசாரத்துக்கு உதவுவேன். நான் எந்த வழியில் சேவை செய்ய முடியுமோ அதற்காக தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு மார்லா மேப்பிள்ஸ் தெரிவித்துள்ளார்.